Author Archives: sundar

ஸ்ரீஅப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி வைபவம் – பூர்வாசிரமத்தில் ஸ்வாமியின் மேலும் சில பணிகள் மற்றும் பெற்ற விருதுகள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: 

<< இரு மஹாவித்வான்கள்

1. ஸ்வாமி பூர்வாசிரமத்தில் குமாரவாடி சே. ராமாநுஜாசார்யராய் இருந்த போது, தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டு, தீவிர தேசபக்தியைப் பரப்பி, தேசிய காங்கிரஸின் 60ஆம் ஆண்டு விழாவினை மயிலையில் ஏற்பாடு செய்து, காமராஜர், முத்துரங்க முதலியார், முன்னாள் முதல்வர் பக்தவத்ஸலம் போன்ற தலைவர்களை அழைத்து விழா நடத்தியவர்.

2. ‘திராவிடக் கழகம்’ பிராமண வகுப்பு துவேஷங்களை எதிர்த்து, தேச பக்தர் எம்.எஸ். சுப்பிரமண்ய ஐயர் தலைமையில் பல கூட்டங்களில் உரையாற்றியவர்.

3. பிராமண எதிர்ப்பு இந்துமத எதிர்ப்பாக மாறி, நாத்திகம் தலையெடுத்த சமயத்தில், விச்வ ஹிந்து பரிஷத் மாநாடுகளில் பங்குகொண்டவர். ஸ்வாமியும், கிருபானந்த வாரியாரும் சநாதன (இந்து) தர்மத்தின் சைவ – வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி, கடலூரில் 1974 இல் ‘நாங்கள் இரு குழல் துப்பாக்கி, எங்களின் இலக்கு ஒன்றே’ என்று வீர முழக்கமிட்டுப் கேட்போரை வியக்க வைத்தனர்.

4. ஸ்ரீவைஷ்ணவ வடகலை – தென்கலை காழ்ப்புணர்வுகளை நீக்க, “ஐக்கிய வைஷ்ணவ” பிரசாரத்தில் ‘லிப்கோ’ அதிபர் கிருஷ்ணசாமி சர்மாவுடன் 1974 இல் இணைந்தவர்.

5. ஸ்ரீபெரும்பூதூரில் 1974 இல் ஸ்ரீ. ஸ்ரீ. ஸ்ரீமந் நாராயண ராமானுஜ ஜீயர் ஸ்வாமி நடத்திய “ஸ்ரீராமாநுஜ க்ரது” விழாவில் பங்குகொண்டு, தாம் எழுதிய ‘பகவத் ராமானுஜர்’ நூலை வெளியிட்டு, காஞ்சி மஹா வித்வானின் முன்னுரையுடன் பாராட்டையும் பெற்றவர்.

6. சுமார் முப்பத்து இரண்டு வருடங்களாக, “திருமால்” ஆன்மீக இதழை எவ்வித தொய்வும் இன்றி நடத்தி, ஸ்ரீவைஷ்ணவ கொள்கைகளைப் பரப்பி வருபவர்.

7. ‘வைணவப் பேரவை’ சார்பில், பாஷ்யம் செட்டியாரோடு சேர்ந்து, ராமானுஜர் இயக்கத்தில் பங்கு கொண்டு, சுமார் 630 கிராமங்களுக்கும் மேல் சென்று, சொற்பொழிவு செய்து ஸ்ரீவைஷ்ணவத்தைப் பரப்பி உள்ளார்.

8. முன்பே கண்டவாறு “திருநாவீறுடைய பிரான்” என்று காஞ்சி ஸ்வாமியும், “ஸார க்ராஹி” என்று காரப்பங்காடு ஸ்வாமியும் விருது  அளித்துள்ளனர்.

9. பாரதி கலைக்கழகம் “செந்தமிழ் வேதியர்” என்கிற விருதை அளித்துச் சிறப்பு செய்தது.

10. “வைணவ மாமணி” என்ற விருதை, கடுக்கலூர் திருமால் அடியார் அருள்நெறி மன்றம் இவருக்கு வழங்கியுள்ளது.

11. சென்னைக் கம்பர் கழகம் இவருக்கு, மர்ரே ராஜம் நினைவுப் பரிசை 1995 இல் வழங்கியுள்ளது.

12. ஸ்ரீ வைஷ்ணவப் பேரவை, “திருவாய்மொழி சிந்தனைச் செல்வர்” என்ற விருதை இவருக்கு வழங்கிப் பாராட்டியது, மற்றும் பலரும் பல்வேறு சமயங்களில் விருதுகள் வழங்கியுள்ளனர்.

13. திருமால் அடியார் குழாமை குமாரவாடி
ஸ்வாமி தொடங்கி வைத்தபின், 15 வைணவத் தலைப்புகளை சொற்பொழிவாற்றக் கொடுத்துள்ளார். அதில் ஒரு தலைப்பே இன்று ஸ்ரீ வைஷ்ணவ உலகம் அறிந்த, உய்யஒரேவழி, உடையவர்திருவடி என்பது. அதை முதன் முதலில்  சொன்னவர் குமாரவாடி
ஸ்வாமி ஆவார்.

14. திரைத்துறையிலும் ஸ்வாமியின் பங்குண்டு. உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ஜி.வி. ஐயருடன் சேர்ந்து, பிரிசித்தி பெற்ற “இராமானுஜர்” திரைப்படத்திற்குக் கதை, வசனம் எழுத உதவியதோடு, அதில் “திருக்கோட்டியூர் நம்பியாகவும் நடித்து,” மேலும் பல உதவிகள் செய்தார்.

அடியேன் ஸுந்தர வரத ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://embarjiyarmutt.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org