ஸ்ரீஅப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி வைபவம் – ஆசார்யன் அநுக்கிரகம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: 

<< திருமால் அடியார் பாத யாத்திரை

ஶ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் பல வித்வான்களை உருவாக்கிய மஹா வித்வானாய்த் திகழ்ந்தவரும், சென்ற நூற்றாண்டில் கீர்த்தி மூர்த்தியாய் எழுந்தருளி இருந்தவருமான நியாய வேதாந்த வித்வான் ஶ்ரீ உ.வே. காரப்பங்காடு ஸ்வாமியிடம், குமாரவாடி ஸ்வாமி தம்முடைய 25 வது வயது முதலே
குருகுல வாச முறையில் ஸ்ரீவைஷ்ணவ உபய வேதாந்த நூல்களுக்குப் பாடம் கேட்டு வந்தவர்.

பரமன் பணித்த குருவான காரப்பங்காடு ஸ்வாமியின் பண்பு,  ஆத்ம
குணங்கள், சாந்தம், தேஜஸ் ஆகியவை இவரை ஆட்கொண்டன. அதனால் அவரிடம் தொடர்ந்து காலக்ஷேபங்களைக் கேட்டுக் கொண்டு வந்திருக்கிறார். காரப்பங்காடு ஸ்வாமியும் இவர்மீது மிக்க அபிமானமும், பரிவும் கொண்டிருந்தார்.

இதற்கிடையில் ஓர் நாள் மயிலை மாதவப் பெருமாள் சந்நிதியில், இவரின் கைகளைப் பிடித்துக்கொண்டு காரப்பங்காடு ஸ்வாமி, “நீர் இனி அரசியல், சமூகப் பணிகள் எல்லாவற்றையும் ஒதுக்கி, ஸம்ப்ரதாயப் (வைணவப்) பணியிலேயே ஊற்றத்துடன் முழுவதுமாக ஈடுபடுவேன் என்று சத்தியம் செய்யும்” என்று இவரிடம் கேட்க, தன் ஆசார்யன் தன் மீது கொண்டுள்ள அபிமானத்தை எண்ணிய இவர், இப்பேற்பட்ட மஹநீயர், சாதாரண அடியவனான தன்னிடம் போய் இப்படி, “எனக்காக ஓர் சத்தியம் செய்து கொடும்” என்று கேட்கிறாரே. என்னே இவரின் கருணை குணம் என்றெண்ணி, “தேவரீர் எம்தன்னை விற்கவும் பெறுவாராயிருக்க, இவ்வாறு கூறலாகுமோ?” என்று அடிபணிந்து, அன்று முதல் ஆசார்யனே கதி என்று ஸம்ப்ரதாயக் கைங்கர்யங்களையே முழுதும் செய்யத் தொடங்கினார்.

இங்கு கூரத்தாழ்வான் தன் சிஷ்யரை ஆட்கொண்ட  அற்புத நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வருகிறது.

கூரத்தாழ்வானின் சிஷ்யராய் இருந்த பிள்ளைப் பிள்ளை ஆழ்வான், அனைத்து அபசாரங்களைத் தவிர்த்திருந்த போதிலும், “பாகவத அபசாரம்” செய்வதை மட்டும் தவிர்க்க முடியாதவராய் இருந்தார். அதாவது மற்ற பாகவதர்களின் ஞான அனுஷ்டான குறைகளை மனத்தில் எண்ணி, அவர்களிடம் அபசாரப் பட்டுக்கொண்டிருந்தார். இதைக் கண்ணுற்ற கூரத்தாழ்வான், ஓர் நாள் பிள்ளைப் பிள்ளை ஆழ்வான் தர்ப்பணம் கொடுக்க திருக்காவிரிக்குச் செல்ல, அவருடன் தானும் சென்றார். தர்ப்பணம் முடிந்த பின், கூரத்தாழ்வான் பிள்ளைப் பிள்ளை ஆழ்வானிடம் யாசகம் கேட்பதாகக் கூறினார். பதறிப்போன பிள்ளைப் பிள்ளை ஆழ்வான், “ஸ்வாமி, அடியேனுடைய சகலவித சம்பத்துக்களும் தேவரீருடையதாய் இருக்க, இப்படி கேட்கலாகுமோ?” என்றார்.

அதற்குக் கூரத்தாழ்வான், “அவ்வாறெனில், நீர் இனி பாகவதர்களைப் பற்றி நினைந்து செய்யும் அந்த அபசாரத்தைக் கைவிடல் வேண்டும், அதுவே யாம் உம்மிடம் கேட்க எண்ணியது” என்றார். தன் ஆசார்யனின் நிருஹேதுகக் கிருபையை எண்ணிய பிள்ளைப் பிள்ளை ஆழ்வான், கண்ணீர் மல்கி அவ்வாறே செய்வதாகச் சத்தியம் செய்தார்.

இப்படித் தங்களின் பரம கருணைக்கு இலக்காகத் தங்களின் சிஷ்யர்களை ஆட்படுத்தி, அவர்களை நற்கதிக்கு வித்திடும் மாண்பு நம் ஆசார்ய சீலர்களுக்கு உரியதாம்.

அப்படியே காரப்பங்காடு ஸ்வாமியும் தன் அன்பினால், இவரை ஆட்கொண்டதின் பயனால், இன்று நம் ஸ்வாமி பலரின் உஜ்ஜீவனத்திற்கும் எம்பெருமானார் காட்டிய வழியில் இருந்து கொண்டு, அருள் செய்கிறார் என்றால் அது மிகையாகா.

என்னே நம் ஆசார்ய சிரோன்மணிகள் தம் சிறப்பு!!

அன்று முதல் மேலும் அணுக்கரான சிஷ்யராகி, புது வாழ்வும் தொடங்கியது. பகவத் விஷயம் காலக்ஷேபமும் அவரிடம் கேட்கத் தொடங்கினார். இப்படி ஸ்வாமி செல்லும் இடங்களிலெல்லாம் ஸ்வாமியின் நிழல் போலத் தொடர்ந்தார். குடும்பத்தைக் கவனிப்பதில்லை என்று ஊரார் கூறும் நிலையும் வந்தது.

காரப்பங்காடு ஸ்வாமியிடத்தில் திவ்யப்ரபந்த வியாக்கியானங்கள், ரஹஸ்ய சாஸ்திரங்கள், ஸ்ரீவசன பூஷணம் அனைத்தையும் முறைப்படி கேட்டவர் இவர். காரப்பங்காடு ஸ்வாமி இவரைத் தம் பிள்ளையாகவே அபிமானித்து வந்தார்.

அதில் ஓர் சுவையான சம்பவத்தை மட்டும் காண்போம். ஓர் சமயம் காரப்பங்காடு ஸ்வாமி ஸ்ரீபாஷ்யம் காலக்ஷேபம் சாதித்துக் கொண்டிருக்க, சிரோன்மணிகளான திருவல்லிக்கேணி பிள்ளைலோகம் ஸ்வாமி, அப்பன் ராமாநுஜாசார்யார் போன்றோரும், ஸ்வாமியும் காலக்ஷேப  கோஷ்டியில் இருந்துள்ளனர்.

‘லகு பூர்வ பக்ஷம் (லகு ஸித்தாந்தம்)’ தலைப்பில் சில விஷயங்களைக் கூறியபின், “இதில் தேறும் அர்த்தம் எது?”  என்று அனைவரிடமும் கேட்டுள்ளார். அப்போது ஒவ்வொருவரும் தங்களின் பதிலைக் கூற, ஸ்வாமியை கடைசியாகப் பார்த்து, “நீர் என்ன தெரிந்து கொண்டீர்?”  என்று கேட்டுள்ளார். அதற்கு ஸ்வாமி, “ஸ விசேஷணம் புத்தி விஷயம்” (விஷேசணம் உடைய ஒரு வஸ்துவே புத்திக்கு எளிதில் படும்) என்று பதிலைக் கூறியுள்ளார். அதற்கு, காரப்பங்காடு ஸ்வாமி, மிக்க மகிழ்ந்து “நீர் ஸார க்ராஹி” என்று பட்டமும் அளித்தார்.
எளிதில் எவரையும் பாராட்ட ஒண்ணாத உயரத்தில் இருந்த காரப்பங்காடு ஸ்வாமி, தம் பாராட்டையும் ஆசியையும் அருளி, சிஷ்யரான இவரைத் தம் பிள்ளையாகவே அபிமானித்த பேற்றைப் பூண்டவர் எம்பார் ஜீயர் ஸ்வாமி ஆவார். அப்பேர்பட்ட உயரியதான ஶ்ரீமுகத்தை நூலின்
கடைசியில் காணலாம். 

அடியேன் ஸுந்தர வரத ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://embarjiyarmutt.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.