ஸ்ரீஅப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி வைபவம் – திருமால் அடியார் பாத யாத்திரை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: 

<< திருமால் ஆன்மீக இதழ் மற்றும் பதிப்பகம்

ஆழ்வார்கள் பாடிய, ஓங்கி உலகளந்த உத்தமன் எழுந்தருளியுள்ள 108 திவ்ய தேசங்களுள் எண்பதுக்கும் மேற்பட்டவை இந்தத் தமிழ் மண்ணில் உள்ளது நாம் பெற்ற பாக்கியம் ஆகும்.

பிரபன்னனின் முக்கிய கடமையாக ‘ஸ்ரீவசன பூஷணத்தில்’ சொல்லப்படுவது, “எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்தலே” ஆகும்.

அப்படி எம்பெருமான், “தான் உகந்து அருளின நிலங்களிலே, ப்ரவணனாய் குணானுபவ கைங்கர்யங்களையே பொழுதுபோக்காய்” பிள்ளை உலகாசிரியன் சொன்ன சொற்படி, குமாரவாடி ஸ்வாமி தம்முடைய பாத யாத்திரையைத் திருமால் அடியார்களோடு தொடங்கத் தீர்மானித்தார்.

தான்உகந்தஊரெல்லாம்தன்தாள்பாடிஎன்று பாடி அவ்வழி தம் திருவடி பட நடந்து, அனைத்துத் திவ்ய தேசங்களுக்கும் சென்று, பாசுரங்கள் பாடி வாழ்த்தினார் பரகாலன் (திருமங்கை ஆழ்வார்). அந்த வழியிலேயே தாமும் நடந்து சென்று, திவ்ய தேசங்களைச் சென்று சேவிக்கப் புறப்பட்டார் நம் ஸ்வாமி.

07-05-1984 அன்று திருமால் அடியார் பாதயாத்திரைக் குழு, “அனைத்துலகும் வாழப் பிறந்தவரான எம்பெருமானார் (ராமானுஜர்)” அவதரித்த           ஸ்ரீபெரும்பூதூரில் இருந்து ஸ்வாமியின் தலைமையில் தொடங்கியது. ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி வரத யதிராஜ ஜீயர் ஸ்வாமி தாமே உகந்து தொடங்கி வைத்து, மதுர மங்கலம் வரையிலும் பாத யாத்திரைக் குழுவுடன் நடந்து வந்தார்.

ஸ்வாமியின் திருவாராதனப் பெருமாளோடும், ராமாநுஜர் சரித்திரங்களைக் கூறும் வண்ணப் படங்களோடும், 108 திவ்ய தேசப் புகைப்படங்களோடும், பிரசாதம் தயாரிக்கத் தேவையான பொருட்களோடும் அவற்றையெல்லாம் சுமந்து செல்ல ஓர் அழகிய மூன்று சக்கர   ரதத்தோடும், ‘திருமாலடியார் குழாம்’ நடந்து திருக்கடிகை, காஞ்சி எனத் தொடங்கி தமிழகத்தை வலம் வரப் பயணமானது.

திவ்ய தேசங்களிலும், அபிமானத் தலங்களிலும், ஆங்காங்கே தங்குமிடங்களிலும், ‘திருமால் நெறி ஓதி’ பிரசாரங்களைச் செய்து கொண்டே சென்றனர். வழியில் உடலை வருத்தும் வெயில், குளிர், மழை மற்றும் பசி என அனைத்தும் எதிர்ப்பட்டன. ஆயினும் அவ்விடர்பாடுகளையெல்லாம் உடைத்தெறிந்து, “கெடும்இடர்ஆயவெல்லாம் கேசவா என்ன” என்று மாலவனையே மனத்துள் இருத்திக் கடந்து சென்றனர்.

திருக்கடிகை, காஞ்சி திவ்ய தேசங்களை முதலாகக் கொண்டு, திருநாங்கூர், வீரநாராயணபுரம் (காட்டுமன்னார் கோயில்), ஸ்ரீரங்கம் ஈறாக (நடுவாக) கொண்டு, ஆழ்வார் திருநகரி, வானமாமலை போன்ற தமிழகத்தில் உள்ள அனைத்துத் திவ்ய தேசங்களையும் நடந்து சென்று சேவித்து மங்களாசாசனம் செய்தனர்.

 
“அல்லும்நன்பகலும்நெடுமால் என்று அழைத்து இனிப்போய்ச் செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே ஒல்கி ஒல்கி நடந்து” என்ற நம்மாழ்வாரின் சொற்படி, பகவத் கைங்கர்யத்தையே ஒரே நோக்கமாகக் கொண்டு நன்பகலும் இரவுமாய் ‘நெடுமாலே’ என்று அழைத்துக்கொண்டு, பாத யாத்திரையால் ஸ்ரீவைஷ்ணவத்தைப் பரப்பினார் ஸ்வாமி.

சுமார் மூவாயிரம் கிலோமீட்டர் தூரம் நடந்து, நான்கரை மாத காலமாக நடந்தேறிய இந்த புதியதோர் வரலாற்றுச் சாதனையைக் கண்டோரும் கேள்விப்பட்டோரும் வியந்து போற்றினர். இவ்வாறாகத் திருமால் அடியார்களின் ஆன்மீக எழுச்சி அனைத்துத் திவ்ய தேசங்களிலும் எதிரொலித்தது.

“பாத யாத்திரை” என்ற ஒரு நூலை எழுதி, அதில் தம்முடைய அனுபவங்களை திவ்ய தேசங்கள் வாரியாகவும், விரிவாகவும் ஸ்வாமியே எழுதியுள்ளார் என்பதும் நூல் வடிவம் கொண்டுள்ளதும்   குறிப்பிட வேண்டிய விஷயம்.

அடியேன் ஸுந்தர வரத ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://embarjiyarmutt.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.