ஸ்ரீஅப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி வைபவம் – இளமைப்பருவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

<< அறிமுகம்

இளமைப்பருவம்:

குமாரவாடி ஸ்வாமி ஸ்ரீ உ.வே. திருமணி ஸ்வாமியின் திருவடி சம்பந்தம் பெற்றவர். தம்  பதினோராவது வயதிலேயே ஸ்வாமியின் திருத்தந்தையார் ஆசார்யன் திருவடி சேர்ந்ததால், தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்தவர்.


குமாரவாடி ஸ்வாமி தம்முடைய பள்ளிப்பருவத்திலேயே மகாகவி பாரதியாரால் ஈர்க்கப்பட்டவர். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதிற்கிணங்க, அப்போது ஆங்கிலேயர் ஆட்சியில் நடைமுறையில் இருந்த “மெக்காலே” ஆங்கில வழிக் கல்வியால் நேர்ந்த, பாரதப் பண்பாட்டுச் சீர்கேடுகளையும், கலாச்சார அழிவையும் எதிர்த்துச் சக மாணவர்களைத் திரட்டிப் போராடினார். அதன் காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தினார்.

அதுமட்டுமின்றி, 1942 இல் நடந்த மகாத்மா காந்தியின் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் ஈடுபட்டவர் என்பதும் மிக முக்கிய நிகழ்வு. இப்படி இளமையிலேயே தேச பக்தியும், மொழிப் பற்றும் கொண்டு, 1942 இல் “மாணவர் தமிழ்க் கழகம்” மற்றும் “பாரதி மன்றம்” போன்றவற்றை நிறுவி, தேசிய எழுச்சியும், தமிழ்ப் பணியும் ஆற்றினார்.

பள்ளிப்படிப்பை பாதியில் விட்டாலும், “தமிழ்த் தாத்தா” என்று போற்றுதலுக்குரிய உ. வே. சாமிநாதையரின் சிஷ்யர்களான ச.கு. கணபதி ஐயர், கி.வ.ஜ.(கலைமகள் ஆசிரியர்), செல்லம் ஐயர் போன்ற சான்றோர்களிடம் தனிக்கல்வி முறையில் பயின்று, தமிழ் வித்வான் இடைநிலை முடித்தார். மேலும் உத்திரமேரூர் ஸ்ரீ உ.வே. வாசுதேவாசார்யரிடம் பழைய முறை சம்ஸ்கிருத கல்வியையும் கற்றார்.

பத்திரிக்கை ஆசிரியராக:

மகாகவி பாரதியின் எழுத்துக்களில் எழுச்சி கண்டு 1943 இல், “பாரத தேவி” எனும் இதழில் சேர்ந்து தேசத் தொண்டாற்றத் தொடங்கினார். அதற்கு முக்கிய காரணம் பாரதியாரின் சீடரான வ.ரா (வ. ராமசாமி ஐயங்கார்) வின் நட்பும் உதவியுமே. “வ.ரா வின் சீடர் சேரா” என்றே குமாரவாடி
ஸ்வாமி அழைக்கப் பட்டார். ஓராண்டு பாரத தேவி இதழின் பணிக்குப் பின், 1944 இல் ஆசிரியர் ஏ.என். சிவராமனைச் சந்தித்து, தினமணியில் பிழை திருத்துபவராக(proof reader) பணியில் சேர்ந்தார். அப்போது ஸ்வாமிக்கு வயது 19. தினமணியில் பல நண்பர்களுடன் உலக அனுபவத்தையும் பெற்றார்.

ஒரு நாள் தினமணி அலுவலகத்திற்கு, “காஞ்சி மகா பெரியவர்” வருகை தந்த போது, அவரை ஒவ்வொருவரும் சென்று விழுந்து வணங்கினார்கள். குமாரவாடி
ஸ்வாமி தம் ஸ்ரீவைணவ முறைப்படி அவரை வீழ்ந்து வணங்காது, தம் இருக்கையிலிருந்து எழுந்து நின்று மரியாதை மட்டும் செலுத்தினார். அதைக் கண்ட அனைவரும் வியப்பு அடைந்தனர்.

குமாரவாடி ஸ்வாமி “மறந்தும் புறம் தொழா மாந்தர்” என்கிற பூர்வாசார்யர்களின் சொல்லுக்கு இலக்கணமாய் திகழ்ந்தவர். இதுபோன்ற தனிப்பட்ட காரணங்களால், நிர்வாகத்தினரின் வெறுப்புக்கு ஆளாகி, பதவி உயர்வு போன்றவற்றில் பாதிப்படைந்தார். ஆனாலும் குமாரவாடி
ஸ்வாமி அவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அதன் பின் சுமார் நாற்பது ஆண்டுக் காலம் தினமணியிலேயே பணியாற்றி முதுநிலை உதவி ஆசிரியராக 1984 இல் ஓய்வு பெற்றார்.

அடியேன் ஸுந்தர வரத ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://embarjiyarmutt.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.