ஸ்ரீஅப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி வைபவம் – ஸ்வாமியின் கைங்கர்யங்கள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: 

<< ஜீயர் பொறுப்பு

ஜீயராகப் பொறுப்பேற்ற பிறகு தம்முடைய வயது முதிர்ச்சியையும் உடல் அசௌகர்யங்களையும் பாராது, எண்ணற்ற ஸ்ரீவைஷ்ணவ மாநாடுகள், உற்சவங்கள், விழாக்கள், ஆழ்வார் ஆசார்யர்கள் திருநக்ஷத்ரங்கள், கிரந்த வெளியீடுகள், திவ்ய தேச அபிமானத் தலங்களின் ஸம்ப்ரோக்ஷணங்கள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள், பாராட்டு விழாக்கள் மற்றும் சநாதன தர்மம் சார்ந்த அரங்குகளிலும் கூட தலைமையேற்றும், ஆசி கூறியும், பங்குபெற்று வருகிறார். இதுவரையிலும் சுமார் ஆயிரத்திற்கும் மேலான இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்காற்றி இருப்பார். அவற்றையெல்லாம் சொல்லத் தனி நூலையே எழுத வேண்டும்.

கவனத்தில் உள்ள சில முக்கிய நிகழ்வுகளையும், ஸ்வாமியின் கல்யாண(ஆத்ம) குணங்களையும் சொல்லி நிறைவு செய்கிறேன்.

1.நேர்மையான எளிய வாழ்க்கையும் உயர்ந்த குறிக்கோள்களையும் கொண்டவர். சிந்தைத்தெளிவாக்குஅல்லால்இதைச்செத்தஉடலாக்கு என்கிற மகாகவி பாரதியின் சொல்லை அடிக்கடி சொல்வதோடின்றி, அதேபோல் வாழ்ந்தும் காட்டியவர் ஸ்வாமி.

2. மிகவும் சௌசீல்ய குணம் நிறைந்தவர். தாம் ஒரு ஜீயர், மடாதிபதி போன்ற எண்ணங்கள் இல்லாது, அனைவரிடமும் சாதாரணமாகப் பழகும் எளிமையான குணம் உடையவர்.

3. ஸம்ப்ரதாயத்தில் 94 ஆண்டு கால அனுபவங்களுடன் நம்மிடையே எழுந்தருளிருக்கும் மஹா புருஷர். இவரைப் பற்றியும், இவரின்  அரும்பணிகள் பற்றியும் இப்போதைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  

4. அவர் பாதயாத்திரை செய்த போது, பசியின் வலிமையை உணர்ந்தவர். யார் மடத்திற்கு இவரைச் சேவிக்க வந்தாலும் கேட்கும் முதல் கேள்வி, “எங்கிருந்து வருகிறீர்கள்? நீங்கள் சாப்பிட்டீர்களா??” என்பதுதான். “பசியின் கொடுமையை நான் உணர்ந்தவன்” என்று அடியேனிடம் கூட பகிர்ந்துள்ளார்.

5. தன்னால் யாருக்கும் சிறிது இன்னல் நேர்ந்தாலும், அதைப் பொறுக்க மாட்டாதவர். எதையும் நடைமுறைச் சாத்தியதோடு யோசிக்கும் ஆற்றல் படைத்தவர். 

6. ஜீயராகப் பொறுப்பேற்ற பின், ஸ்ரீவசன பூஷணம், பகவத் விஷயம் மற்றும் முமுக்ஷுப்படி போன்ற எண்ணற்ற க்ரந்தங்களை காலக்ஷேபமாகச் சாதித்துள்ளார்.

7. சிஷ்யர்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு தோறும், ரஹஸ்ய க்ரந்த காலக்ஷேபங்கள் தொடர்ந்து இப்போதும் நடத்தி வருகிறார்.

8. திருக்கோட்டியூர் ஸ்ரீ உ.வே. மாதவன் ஸ்வாமியின் ஏற்பாட்டின் படி, ஆழ்வார் அமுத நிலையத்தின் ஜெகத்ரக்ஷகன் நடத்திய ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்.

9. ஸ்ரீ உ.வே வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி நடத்திய, கூரத்தாழ்வான் ஆயிராமாவது திருநட்சத்திரத்தின் விழாவில் தலைமை ஏற்று ஆசி வழங்கியவர். மேலும் “கைங்கர்ய ஸ்ரீமாந்” விருதுகள் வழங்கும்
மாபெரும் விழாவில் பங்குகொண்டு, கைங்கர்யபரர்களுக்கு விருதுகளை வழங்கினார். அதேபோல் அவர் “வாழி எதிராசன்
வாழி எதிராசன்” என்ற தலைப்பில் எம்பெருமானாரின் ஆயிரமாவது ஆண்டிற்கு நடத்திய விழாவிலும் தலைமையேற்று சிறப்பு செய்தவர்.

10. ஒவ்வொரு மாதமும் எம்பெருமானார் அவதரித்த திருவாதிரை அன்றும், எம்பெருமானாரின் அவதார உற்சவ நாட்களிலும், “எம்பார் மற்றும் ஒன்றான எம்பார் ஜீயரின்” அவதார திருநக்ஷத்திரங்களின் போதும் ததீயாராதனம் குறைவின்றி நடந்து வருகிறது.

11. ஸ்ரீபெரும்பூதூரின் நுழைவு வளைவு அமைக்க உடனிருந்து சேவையாற்றியவர்.

 12. மார்கழி மாதந்தோறும் சிறப்பு திருப்பாவை உபந்யாசம் செய்து வருகிறார்.

13. சமீபத்தில் கூட சிஷ்ய குழாங்களுடன் அநு யாத்திரை சென்று, குமாரவாடியில் இருந்தே இதே எம்பார் ஜீயர் மடத்தின் ஐந்தாவது பட்டத்தை அலங்கரித்த, ஸ்ரீஅப்பன் பராங்குச ராமானுஜ எம்பார் ஜீயருக்கு நினைவு கல்வெட்டினை திறந்து வைத்தார்.

14. ஸ்வாமி நிறையப் படிக்கும் வழக்கம் உள்ளவர், அவர் மடத்தில் உள்ள நூலகத்தில் மற்றவர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சியுள்ள நூல்களே இதற்குச் சாட்சி.

15. வாழ்க்கை அனைத்தையும் திருமால் பெயரிலேயே எண்ணற்ற கைங்கர்யங்களைச் செய்து செலவிட்ட இவர், அதே திருமாலின் திருநாமங்களையே (விஷ்ணு சஹஸ்ர நாம ஸ்தோத்ரம்) எப்போதும் வாயால் சொல்லி வருவதை இன்றும் காணலாம்.

16. முதல் கீதாசார்யன் பிரதியை, ஜீயர் ஸ்வாமி வெளியிட, அதை ஆழ்வார் திருநகரி ஸ்ரீ உ.வே. இளையவில்லி ஸ்ரீநிவாஸ பூவராஹாசார்யர் ஸ்வாமி பெற்றுக்கொள்கிறார். உடன் கீதாசார்யன் ஆசிரியர் ஸ்ரீ உ.வே. எம்.ஏ வேங்கட க்ருஷ்ணன் ஸ்வாமி மற்றும் ஸ்ரீ உ.வே. ராஜஹம்சம் ஸ்வாமி.

17.தான் இந்த மடத்தின் பொறுப்பேற்ற பின், அடியார்கள் தங்குவதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து, பின்புறம் உள்ள மடத்தின் பகுதியை சீர் செய்தவர்.  எம்பெருமானாரின் ஆயிரமாவது ஆண்டின் போது அடியார்கள் தங்குவதற்காக, புதுப்பித்தவர். மற்றும் “இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டிற்கு ஓர் அஞ்சலி” என்ற நூலையும் எழுதி வெளியிட்டவர்.

18. திருத்தேர் உற்சவம் 9ம் நாள் உடையவருக்கு மடத்தில் மண்டகப்படி. திருவாடிப்பூரத்தன்று ஸ்ரீஆண்டாள், பெருமாள் மற்றும் உடையவருக்கு மடத்தில் மண்டகப்படி.

19. மடத்தின் மூலபுருஷர் திருவேங்கட ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமிக்கு, அருளிச்செயல் சாற்றுமுறை மற்றும் ததீயாராதனையுடன் விழா.

20. ஸ்ரீபெரும்பூதூரில் உள்ள மணவாள மாமுனிகள் சந்நிதியில் உள்ள ஸ்ரீ பிள்ளை உலகாசிரியன் சந்நிதி பழுதடைந்த போது, தம் சக்திக்கும் மீறிய செலவில் புதிப்பித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மதுரமங்கலம் எம்பார் சந்நதி போன்றவைகளுக்கும் நிதி உதவி செய்துள்ளார். 

21. “ஸமோऽஹம் ஸர்வபூ⁴தேஷு ந மே த்³வேஷ்யோऽஸ்தி ந ப்ரிய:| யே ப⁴ஜந்தி து மாம் ப⁴க்த்யா மயி தே தேஷு சாப்யஹம்” -என்று கீதாசார்யனான கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான். அதன் பொருளாவது, “அர்ஜுனா, என் பக்தர்களுக்குள், மனிதன் என்றோ, விலங்கு என்றோ அல்லது பட்ஷிகள் என்றோ, இவன் உயர் குலம் என்றோ, இவன் தாழ் குலம் என்றோ நான் பாரபக்ஷம் பார்ப்பதில்லை. அவர்களின் பக்தியையும், அன்பையும் மட்டுமே பார்க்கிறேன் என்றான். அதேபோல், ஆழ்வார்களும், எம்பெருமானாரும் சொல்லிச் சென்ற வழியில், எம்பெருமானின் அடியவர்களுக்குள் சரீரத்தினால் ஏற்படும் சாதி, வர்ணம் முதலான ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமத்துவம் காத்து நிற்பவர் நம் ஸ்வாமி.

22. ஸ்வாமியின் சிறு வயதிலிருந்தே நாம் கண்டவாறு, தேசத்தொண்டுகள், திருமால் அடியார் குழாம் மூலமாகத் திருவாய்மொழி இலவச வகுப்புகள், திருமால் இதழ் மற்றும் பதிப்பக நூல்கள், ஸ்ரீவைஷ்ணவ மாநாடுகள் மற்றும்  பிரசாரங்கள், திவ்ய தேசங்களில் பாத யாத்திரை, சநாதன தர்மத்திற்கும், சம்பிரதாயத்திற்கும் இன்று வரை தொடர்ந்து செய்து வரும் எண்ணிறந்த கைங்கர்யங்கள் போன்றவை சமூகத்திலும் சரி, சம்பிரதாயத்திலும் சரி இன்றைய உலகில் அபூர்வமானவை. மேலும் இன்றும் ஸ்வாமியின் குறையாத ஆர்வமும், அயராத உழைப்பும் வேரெங்கும் காண அரிதானவை.

23. இப்படியாக சந்யாசியாக அவர் எம்பெருமானார் காட்டிய வழியில், இன்று வரை தம்முடைய கைங்கர்யத்தினைத் தொடர்ந்து ஆற்றி வருகிறார்.

அடியேன் ஸுந்தர வரத ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://embarjiyarmutt.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.