ஸ்ரீஅப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி வைபவம் – ஜீயர் பொறுப்பு

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

<< ஸ்வாமியின் மேலும் சில பணிகள் மற்றும் பெற்ற விருதுகள்

இப்படி இடைவிடாத தொண்டுகளையும், கைங்கர்யங்களையும் செய்து, அரும்பணியாற்றி வந்த ஸ்வாமிக்கு, ‘யதிகட்கு இறைவனான எம்பெருமானார்’ மேலும் ஒரு மிக உன்னத பொறுப்பையளிக்கத் திருவுள்ளம் கொண்டார் போலும். எம்பெருமானார் அவதரித்த பூதபுரியிலேயே, தான் வீற்றிருக்கும் சந்நிதிக்கு நூல் பிடித்தாற்போல் நேர் எதிரே உள்ள எம்பார் ஜீயர் மடத்தின் மடாதிபதியாக அமர்த்தினார். மடத்தின், ‘பத்தாவது பட்டம், பதினோராவது ஜீயராக’ ஸ்வாமியும் 19-02-2006 இல் பொறுப்பை ஏற்றார்.

“ஸ்ரீ உ.வே குமாரவாடி ராமாநுஜாசார்யார், ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீ அப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயராய்” ஆனார்.

அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி (ஒன்றான எம்பார் ஜீயர் ஸ்வாமி):

இம்மடத்தின் ஸ்தாபகர் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தருளி இருந்த, ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி அப்பன் திருவேங்கட ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி (ஒன்றான எம்பார் ஜீயர் ஸ்வாமி) ஆவார். கண்ணன் அவதரித்த ஆவணியில் ரோஹிணியிலேயே இவர் அவதரித்தவர். இவர் ஒரு மஹா ஞானியாகவும், யோகியாகவும் எழுந்தருளி இருந்தவர். பிரம்மசாரியாய் இருந்து, திருமணம் செய்யாது, நேரே துறவறம் பூண்ட வைராக்ய சீலர். இவர் தாம் அருளிச்செய்த எண்ணற்ற க்ரந்தங்கள் (நூல்கள்) உலகில் காணக்கிடையாதவை அரிதானவை.

இவர்தான் எம்பெருமானார்க்குத் துயிலெழுப்பும் சுப்ரபாதத்தையும், திருமஞ்சனக் கட்டியத்தையும் எழுதி ஏற்படுத்தியவர். ஸ்ரீபெரும்பூதூர் ஊரையும் சந்நிதியையும் திருத்தி ஒழுங்கு படுத்தி வைத்தவர் என்பதும் அவரின் முக்கிய பணிகளுள் சில.

ஒன்றான எம்பார் ஜீயரின் திவ்ய சரிதத்தை, ஞானம்கனிந்தநன்முனிவர்என்கிற தலைப்பில் நம் ஸ்வாமி விளக்கமாக எழுதி வெளியிட்டுள்ளார். ஒன்றான எம்பார் ஜீயரின் வைபவத்தை அறிய விரும்புவோர் அந்நூலை வாசித்து அறிந்துகொள்ளலாம்.

ஒன்றான எம்பார் ஜீயர் ஸ்வாமிக்கு எண்ணற்ற சிஷ்யர்கள் இருந்துள்ளனர். அதில் ஒருவரே உபய வேதாந்த வித்வான் காரப்பங்காடு ஸ்ரீ சிங்கப்பெருமாள் ஸ்வாமி ஆவார்.

அப்பேர்பட்ட மஹாநுபாவரின் பெயரன் அல்லது சிஷ்யரின் சிஷ்யரே ஸ்ரீ உ.வே. காரப்பங்காடு வேங்கடாசார்ய ஸ்வாமி ஆவார். அந்த காரப்பங்காடு
ஸ்வாமியின் சிஷ்யர் நம் ஜீயர் ஸ்வாமி. இப்படி ஒன்றான ஜீயருக்கு நான்காவது சிஷ்ய தலைமுறையில் உள்ள இந்த ஸ்வாமி, அவருக்குப்பின் மடத்தின் பத்தாவது பட்டம், பதினோராவது ஜீயராக ஆனதும் உடையவர்இன்னருளே.

“ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று பேசி வரம்பறுத்தார் பின்” என்று மாமுனிகள் போற்றிய எம்பெருமானார் விதித்த வழியில், குமாரவாடி ஸ்வாமி ஜீயராக ஆனபின்பு தம்முடைய ஆச்ரமத்திற்கும், பொறுப்பிற்கும் ஏற்ப கைங்கர்யங்களை ஸம்ப்ரதாயத்திற்கு செவ்வனே செய்து வருகிறார்.

இதுவரையிலும் சுமார் பன்னிரு ஆண்டுகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப் ‘பஞ்ச சம்ஸ்காரம்’ செய்துள்ளார். சிஷ்யர்களுக்கு, ‘உய்ய ஒரே வழியான உடையவர் திருவடியைக் காட்டிக் கொடுத்து,’ அவர்களின் உஜ்ஜீவனத்திற்குப் பாடுபட்டும் வருகிறார்.

அடியேன் ஸுந்தர வரத ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://embarjiyarmutt.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.