Monthly Archives: March 2019

ஸ்ரீஅப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி வைபவம் – திருமால் பதிப்பகம் மற்றும் பிரச்சாரங்கள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: 

<< திருமால் அடியார் குழாம்

“திருமால்தலைக்கொண்டநம்கட்குஎங்கேவரும்தீவினையே?”  – என்று வாய்மொழிந்த ஆழ்வாரின் கூற்றிற்கு ஏற்ப, குமாரவாடி ஸ்வாமி அடுத்து அந்தத் திருமாலின் பெயரிலேயே தொடங்கிய ஆன்மீக இதழ் தான் “திருமால்”. 1986 இல் எவ்வித ஆள் பலமோ அல்லது பண பலமோ இன்றி தொடங்கிய இவ்விதழ், திருமால் நெறியையும், ஸ்ரீவைஷ்ணவக் கோட்பாடுகளையும் ஆன்மீக ஆர்வமுள்ளோர்க்கும், ஸம்ப்ரதாயத்தில் உள்ளோர்க்கும் இன்றும் தொன்று தொட்டுத் தொடர்ந்து சொல்லி வருகிறது. இவ்விதழில் வரும் ஸ்வாமியின் தலையங்கங்கள் ஸ்ரீ வைஷ்ணவப் பெரியோர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றவை. இன்றும் குமாரவாடி ஸ்வாமி தம்முடைய பங்களிப்பை இவ்விதழின் மூலமாக ஆற்றி, ஆன்மீகக் கட்டுரைகளையும், வியாக்கியானங்களையும் செய்து வருகிறார். திருமால் இதழின் பொறுப்பாசிரியர் பேராசிரியர் டாக்டர் மதி ஸ்ரீநிவாசன், கௌரவ ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் டாக்டர் டி.எஸ். இராமசாமி, மற்றும் அலுவல், செய்தி பொறுப்பில் உள்ள திரு.ஆர். ரங்கராஜன் மற்றும் சௌ.பங்கஜம் போன்றோர் தங்களின் பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

நூல்கள் வெளியீடு:

இப்படிப் பல்வகையான கைங்கர்யங்களைச் செய்துகொண்டே குமாரவாடி ஸ்வாமி எஞ்சிய நேரத்தைப் பயன்படுத்தி, சுமார் இருபத்து ஐந்திற்கும் மேலான நூல்களை எழுதியும், தொகுத்தும் திருமால் பதிப்பகம் மூலம் வெளியிட்டு உள்ளார்.

ஸ்வாமியின் எழுத்துக்கள் தனித்துவமும், ஆழ்பொருளும் பொதிந்தவை. அதை வாசிக்கும் போது உணரலாம். அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் இவரின் ஆழ் சிந்தனையின் அளவைக் கூறும். ஆன்மீகத் திராவிடம், பகவத் ராமாநுஜர் வரலாறு, அழகிய மணவாள மாமுனிவன் வரலாறு மற்றும் இராமானுசரின் ஆயிரம் ஆண்டிற்கு ஓர் அஞ்சலி போன்றவை பல பதிப்புகள் கண்டவை.

(ஸ்வாமியின் வெளியீட்டு நூல்களின் முழு விவரங்களும் இந்நூலின் கடைசி பக்கத்தில் காண்க)

ஸ்ரீவைஷ்ணவ மாநாடுகள் மற்றும் பிரசாரங்கள்:

நாடும்நகரமும்நன்கறியநமோநாராயணாயஎன்று

பாடும்மனமுடைபத்தர்உள்ளீர்வந்துபல்லாண்டுகூறுமினே

என்கிற பெரியாழ்வாரின் திருவாக்கின்படி, திருமால் அடியார் குழாம் கிராமங்களை நோக்கிச் சென்று, ஆங்காங்கே உள்ள திருமால் அடியார்களுடன் கலந்து, திருமால் நெறியைப் பல வழிகளிலும் பரப்பியது.

நூற்றுக்கணக்கான கிராமங்களில் சென்று திருமால் பக்தியைப் பறைசாற்றித் தொண்டாற்றியது.

திருமால் அடியார் குழாமின் 25வது ஆண்டின் நிறைவைக் கொண்டாடி ஓர் மலரையும் வெளியிட்டது. அதன் மூலம் முழு விவரங்களையும், திருமால் அடியார் குழாமில் அரும்பணி ஆற்றிய சான்றோர்களையும் அறியலாம்.

நாள்தோறும், அருளிச்செயல் சந்தை வகுப்புகள், ஸ்ரீவைஷ்ணவ கிரந்த காலக்ஷேபங்கள், பகவத் விஷய காலக்ஷேபம் போன்றவை.

மாதந்தோறும், திருமால் வழிபாட்டுத்தலங்களில் வழிபாடு ஏற்பாடு செய்தல், அருளிச்செயல் வீதிவலம், கருத்தரங்கங்கள் போன்றவையும், ஆண்டுதோறும், ஸ்ரீரங்கம், திருமலை, திருச்சானூர், திருநாராயணபுரம் (மேல்கோட்டை) மற்றும் சென்னை போன்ற இடங்களில் ஆன்மீக மாநாடுகளையும் நடத்தி திருமால் பக்தியை விதைத்தும் வளர்த்தும் வந்தது திருமால் அடியார் குழாம்.

அதுமட்டுமன்றி, ஸ்வாமி தம்முடைய பூர்வாசிரமம் மயிலையில் இருந்த இல்லத்தின் மேல் தளத்தில், “ஸ்ரீ காரப்பங்காடு ஸ்வாமி” பெயரில் கூடத்தையும் நிறுவி அதில் எண்ணற்ற அரங்குகளையும், உபந்யாசங்களையும் தான் சொல்லியும், பிறரைச் சொல்லச் சொல்லியும் செய்து வந்துள்ளார். புதுவையில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் திருப்பாவை உபன்யாசங்கள் குறிப்பிடத்தக்கவை.

அடியேன் ஸுந்தர வரத ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://embarjiyarmutt.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஸ்ரீஅப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி வைபவம் – திருமால் அடியார் குழாம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: 

<< தேசத்தொண்டுகள்

 “புகுந்திலங்கும்அந்திப்பொழுதகத்து, அரியாய்

இகழ்ந்தஇரணியனதாகம், சுகிர்ந்தெங்கும்

சிந்தப்பிளந்ததிருமால்திருவடியே

வந்தித்தென்னெஞ்சமேவாழ்த்து.

என்கிற பேயாழ்வார் திருவாக்கின்படி, திருமாலே நாம்
வாழ்த்தி, வணங்கி, பூசித்து, பொழுதையும் போக்க வேண்டியவனும் ஆவான். ‘வேறு எவருக்கும் அடிமைத் தொழில் செய்ய ஒண்ணாது’ என்று நினைத்த ஔவை, “திருமாலுக்கு அடிமை செய்” என்றார். அப்படிப்பட்ட திருமாலின் பெயரிலேயே, “திருமால் அடியார் குழாம்” என்ற இயக்கத்தை நம் குமாரவாடி
ஸ்வாமி 1976 இல் தலைமையேற்றுத் தொடங்கினார்.

இவ்வியக்கத்தின் முக்கிய நோக்கம் ஜீவாத்மாக்களாகிய மக்களைத் திருத்தி, திருமாலுக்கு உரியவர்களாக்கி உய்வடையச் செய்வதுவே ஆகும். அதன் செயலாளராக முதலில்
 திரு.இரா சுராஜ் ஸ்வாமி அவர்களும் அவருக்குப்பின் முனைவர் ஏ. பரந்தாம ராமானுஜ தாசரும் இருந்து அரும்பணி செய்து வந்தனர். கபிஸ்தலம் ஏ.ஸ்ரீனிவாசாசாரியார், டாக்டர் மதி ஸ்ரீனிவாசன், வித்வான் காழியூர் ஸ்ரீராம ஐயங்கார், முனைவர் டி.எஸ். இராமசாமி, திருக்குடந்தை எஸ்.திருவேங்கடத்தான், ஸ்ரீ கே.ரங்கராஜன், கவிஞர் கலியன் சம்பத்து, மதுராந்தகம் திருமால் கவிஞர் ரகுவீரபட்டாசாரியார், ஸ்ரீ ஆர்.பார்த்த சாரதி, திரு. பாஷ்யம் ராமானுஜ தாசர், திரு வேணுராச நாராயணன், ஸ்ரீ உ.வே. அரங்கநாதாசாரியார், இரா பத்மாவதி, பேராசிரியர் நாகு, சடகோப கல்யாணராமன் ஆகியோர் பங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வியக்கத்தின் மூலம் அருளிச் செயல் வீதிவலம் (திவ்யப் பிரபந்த கோஷ்டி), ஆழ்வார் ஆசார்யர்கள் திருநட்சத்திர விழாக்களைக் கொண்டாடுதல், திருவாய்மொழி இலவச வகுப்பு, உபந்யாசங்கள் (சொற்பொழிவுகள்), ஸ்ரீவைஷ்ணவ நூல்கள் வெளியீடுகள், ஸ்ரீ வைஷ்ணவ மாநாடுகள், “நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாய” போன்ற பல தொண்டுகளைத் தமிழகத்தில் உள்ள திவ்ய தேசங்கள் சார்ந்த பகுதிகளில் ஆற்றி வந்திருக்கிறது. மேலும் பல மாவட்டக் கிளைகளை நிறுவி, பல பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும் உருவாக்கி வந்தது. அதில் சிலவற்றை சற்று விரிவாகக் காண்போம்.

திருவாய்மொழி
இலவச வகுப்புகள்:

உண்டோசடகோபர்க்குஒப்பொருவர்?

உண்டோதிருவாய்மொழிக்குஒப்பு?”

என்று மொழிந்த மாமுனிகளின் எண்ணப்படி, திருமால் அடியார் குழாம் திரு. இரத்தினவேல் முதலியாரின் பெரும் ஆதரவுடன் 1990ஆம் ஆண்டு முதல், வட சென்னை K.R.C மற்றும் A.R.C பள்ளியில் மே மாதங்கள் தோறும் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தி வந்தது. இதில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட திருமாலடியார்கள் இதில் கலந்து கொண்டு, திருமால் மற்றும் நம்மாழ்வாரின் அருள் பெற்றனர். அதில் கலந்துகொண்ட கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குச் சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பு செய்தது திருமால் அடியார் குழாம். குமாரவாடி ஸ்வாமி ஜீயராகப் பொறுப்பேற்ற பின்னரும் இந்த இலவச வகுப்புகள் தொடர்ந்து 25 ஆண்டுகளாய் நடைபெற்று வந்தன.

அடியேன் ஸுந்தர வரத ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://embarjiyarmutt.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஸ்ரீஅப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி வைபவம் – இளமைப்பருவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

<< அறிமுகம்

இளமைப்பருவம்:

குமாரவாடி ஸ்வாமி ஸ்ரீ உ.வே. திருமணி ஸ்வாமியின் திருவடி சம்பந்தம் பெற்றவர். தம்  பதினோராவது வயதிலேயே ஸ்வாமியின் திருத்தந்தையார் ஆசார்யன் திருவடி சேர்ந்ததால், தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்தவர்.


குமாரவாடி ஸ்வாமி தம்முடைய பள்ளிப்பருவத்திலேயே மகாகவி பாரதியாரால் ஈர்க்கப்பட்டவர். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதிற்கிணங்க, அப்போது ஆங்கிலேயர் ஆட்சியில் நடைமுறையில் இருந்த “மெக்காலே” ஆங்கில வழிக் கல்வியால் நேர்ந்த, பாரதப் பண்பாட்டுச் சீர்கேடுகளையும், கலாச்சார அழிவையும் எதிர்த்துச் சக மாணவர்களைத் திரட்டிப் போராடினார். அதன் காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தினார்.

அதுமட்டுமின்றி, 1942 இல் நடந்த மகாத்மா காந்தியின் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் ஈடுபட்டவர் என்பதும் மிக முக்கிய நிகழ்வு. இப்படி இளமையிலேயே தேச பக்தியும், மொழிப் பற்றும் கொண்டு, 1942 இல் “மாணவர் தமிழ்க் கழகம்” மற்றும் “பாரதி மன்றம்” போன்றவற்றை நிறுவி, தேசிய எழுச்சியும், தமிழ்ப் பணியும் ஆற்றினார்.

பள்ளிப்படிப்பை பாதியில் விட்டாலும், “தமிழ்த் தாத்தா” என்று போற்றுதலுக்குரிய உ. வே. சாமிநாதையரின் சிஷ்யர்களான ச.கு. கணபதி ஐயர், கி.வ.ஜ.(கலைமகள் ஆசிரியர்), செல்லம் ஐயர் போன்ற சான்றோர்களிடம் தனிக்கல்வி முறையில் பயின்று, தமிழ் வித்வான் இடைநிலை முடித்தார். மேலும் உத்திரமேரூர் ஸ்ரீ உ.வே. வாசுதேவாசார்யரிடம் பழைய முறை சம்ஸ்கிருத கல்வியையும் கற்றார்.

பத்திரிக்கை ஆசிரியராக:

மகாகவி பாரதியின் எழுத்துக்களில் எழுச்சி கண்டு 1943 இல், “பாரத தேவி” எனும் இதழில் சேர்ந்து தேசத் தொண்டாற்றத் தொடங்கினார். அதற்கு முக்கிய காரணம் பாரதியாரின் சீடரான வ.ரா (வ. ராமசாமி ஐயங்கார்) வின் நட்பும் உதவியுமே. “வ.ரா வின் சீடர் சேரா” என்றே குமாரவாடி
ஸ்வாமி அழைக்கப் பட்டார். ஓராண்டு பாரத தேவி இதழின் பணிக்குப் பின், 1944 இல் ஆசிரியர் ஏ.என். சிவராமனைச் சந்தித்து, தினமணியில் பிழை திருத்துபவராக(proof reader) பணியில் சேர்ந்தார். அப்போது ஸ்வாமிக்கு வயது 19. தினமணியில் பல நண்பர்களுடன் உலக அனுபவத்தையும் பெற்றார்.

ஒரு நாள் தினமணி அலுவலகத்திற்கு, “காஞ்சி மகா பெரியவர்” வருகை தந்த போது, அவரை ஒவ்வொருவரும் சென்று விழுந்து வணங்கினார்கள். குமாரவாடி
ஸ்வாமி தம் ஸ்ரீவைணவ முறைப்படி அவரை வீழ்ந்து வணங்காது, தம் இருக்கையிலிருந்து எழுந்து நின்று மரியாதை மட்டும் செலுத்தினார். அதைக் கண்ட அனைவரும் வியப்பு அடைந்தனர்.

குமாரவாடி ஸ்வாமி “மறந்தும் புறம் தொழா மாந்தர்” என்கிற பூர்வாசார்யர்களின் சொல்லுக்கு இலக்கணமாய் திகழ்ந்தவர். இதுபோன்ற தனிப்பட்ட காரணங்களால், நிர்வாகத்தினரின் வெறுப்புக்கு ஆளாகி, பதவி உயர்வு போன்றவற்றில் பாதிப்படைந்தார். ஆனாலும் குமாரவாடி
ஸ்வாமி அவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அதன் பின் சுமார் நாற்பது ஆண்டுக் காலம் தினமணியிலேயே பணியாற்றி முதுநிலை உதவி ஆசிரியராக 1984 இல் ஓய்வு பெற்றார்.

அடியேன் ஸுந்தர வரத ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://embarjiyarmutt.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஸ்ரீஅப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி வைபவம் – தேசத்தொண்டுகள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

<< இளமைப்பருவம்

தேசத்தொண்டுகள்:

இக்கால கட்டத்தில் வெறும் பத்திரிக்கைத் தொழிலை மட்டும் பார்த்திராது, எண்ணற்ற தேசப் பணிகளையும், தெய்வீகப் பணிகளையும் செய்தவர் ஸ்வாமி. 1970 ன் தொடக்கத்தில் “அறநெறி இயக்கம்” என்கிற இயக்கத்தைத் தொடங்கி, கிராமப்புறங்கள் தோறும் அரசியல் விழிப்புணர்வு மற்றும் சமுதாயப் பணியாற்றி வந்திருக்கிறார். அதனால் எண்ணற்ற தலித் மற்றும் குப்பம் வாழ் அடித்தட்டு மக்களும், பிராமணரான இவரை ஆச்சர்யக் கண் கொண்டு நோக்கினர், பயனும் பெற்றனர்.

அதற்காகப் பெருந்தலைவர் காமராஜரின் பாராட்டுதலையும் பெற்றார். மேலும் கர்ம வீரர் காமராஜர் இவரை முழு நேர அரசியலுக்கு வந்து விடும்படியும்  அழைத்தார். இவரின் இச்சிறந்த சமூக சேவைகளைப் பாராட்டி, ஆயிரத்தில் ஒன்று அறநெறி இயக்கம்” “லட்சத்தில் ஒருவர் இராமானுஜம்” என்று ‘துக்ளக்’ இதழ் 1970 இல் இவரைக் கவுரவித்துக் கொண்டாடியது.

மேலும், “இதோ ஒரு செந்தமிழ் வேதியர்” என்கிற தலைப்பில், தினமணி கதிர் ஆன்மீகக் கட்டுரை ஒன்றை வெளியிட்டு இவருக்குச் சிறப்பும் செய்தது.

இது போன்ற தேச, சமுதாய மற்றும் மொழி சார்ந்த இவரின் அயராத சேவைகளால் சே.ராமாநுஜாசார்யர் (சே.ரா), சேவை ராமாநுஜாசார்யர் ஆனார்.  அதேபோல் ‘ஊருக்கு நல்லது’ எனும் தலைப்பில் “நாடும் நகரமும் நமோ நாராயணாய” ஆன்மீக யாத்திரைகளை அவ்வப்போது செய்து வந்துள்ளார். ஐக்கிய வைணவ சபையிலும் இவரின் பங்களிப்பு கனிசமாக உண்டு.

காங்கிரஸ் பேரியக்கத்தின் உறுப்பினராகி தேச விடுதலைப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இவருக்கு அவ்வியக்கத்தில் தலைகாட்டிய வகுப்பு வாதம், பிராமண எதிர்ப்புணர்ச்சிகளாலும், தலைவர்கள் அவற்றை தட்டிக் கேட்காததாலும் வெறுப்புண்டாகி இயக்கப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். மேலும் கதர் ஆடை மட்டுமே உடுத்தி, கதர் இயக்கத்திலும் பங்கேற்றவர்.

அடியேன் ஸுந்தர வரத ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://embarjiyarmutt.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஸ்ரீஅப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி வைபவம் – அறிமுகம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

எம்பெருமானார் தரிசனமாகிய பரம வைதீக மார்க்கத்தில்,தொண்டை மண்டலச்சான்றோர்களின்பங்களிப்பு தனிச் சிறப்புற்றது.

முதலாழ்வார்கள் பொய்கையார், பூதத்தார் பேயாழ்வார் மற்றும் திருமழிசை ஆழ்வார்  தொடக்கமாக, எம்பெருமானார், கூரத்தாழ்வான், முதலியாண்டான் மற்றும் எம்பார் போன்ற மஹா ஆசார்யர்களை நடுநாயகமாய்க் கொண்டு, எண்ணிறந்த சான்றோர்களைத் தந்து வீறுகொண்டு விளங்குகிறது. ஆகையால் தான் ஒளவை மூதாட்டியும், “தொண்டை மண்டலம் சான்றோருடைத்து” என போற்றினாள்.

அத்தகைய சீரும் சிறப்பும் வாய்ந்த தொண்டை மண்டலத்தில் மலைவையாவூர், குமாரவாடியில் 1925 இல், மாசி மாதம் கார்த்திகை திருநட்சத்திரத்தில் தோன்றியவர் அன்றைய ஸ்ரீ உ.வே. குமாரவாடி சே. ராமாநுஜாசார்யர், அவரே இன்று ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீ அப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமியும் ஆவார்.
இவர் திருத்தகப்பனார் வங்கீபுரம் பத்தங்கி சேஷாத்ரி ஐயங்கார், திருத்தாயார் காழியூர் பெருந்தேவி அம்மங்கார். விவசாய வாழ்க்கை நடத்திய எளிய குடும்பம்.


அடியேன் ஸுந்தர வரத ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://embarjiyarmutt.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org